அடிப்படைவாத தீவிரவாதிகள் 130 பேரை கைது செய்து, நாட்டிலிருந்து ஐ.எஸ் முற்றாக ஒழிக்கப்படும் – ஜனாதிபதி

0
97
அடிப்படைவாத தீவிரவாதிகள்
மைத்ரிபால சிறிசேன
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 19
    Shares

இடம்பெற்ற கோர சம்பவத்துக்கான பொறுப்பையும், புலனாய்வு பிரிவு பலவீனமடைந்தமைக்கான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று காலை கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பு பலவீனமடையச் செய்யப்படுகின்றமைக்கு எதிராக தாம் முன்னின்றமை காரணமாகவே, கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்துக்கும் தனக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், அனைத்து முஸ்லிம் மக்களையும் தீவிரவாதிகள் என்ற அடிப்படையில் பார்க்க வேண்டாம் என்று நாட்டிலுள்ள அனைத்து மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள ஜனாதிபதி, முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பெறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் மற்றும் தீவிரவாதம் என்பனவற்றுக்கு இடையிலான தொடர்புகளை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடிப்படைவாத தீவிரவாதிகள் 130 பேர் நாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, அவர்களை கைது செய்து ஐ.எஸ் தீவிரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்படக்கூடும் என வெளிநாட்டு புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்று கடந்த 4ஆம் திகதி கிடைக்கப்பெற்றிருந்தது.

அதில், தாக்குதல்களை மேற்கொள்ளபவர்கள் யார்? எந்த இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளன. எவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பன தொடர்பில் விரிவாக அறிக்கையிடப்பட்டிருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதம் அன்று முதல் 12 ஆம் திகதிவரை பாதுகாப்பு பிரிவுகளின் பிரதானிகளுக்கு இடையில் பரிமாற்றப்பட்டிருந்ததாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த கடிதம், புலனாய்வு பிரிவு பணிப்பாளரிடமிருந்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும், அவரிடமிருந்து தேசிய பாதுகாப்பு பிரதானிகளுக்கும் கைமாற்றப்பட்டிருந்ததுடன், பின்னர் அது காவல்துறைமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வெளிநாட்டு புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய கடிதத்தை காவல்துறைமா அதிபர், 5 பிரதி காவல்துறைமா அதிபர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த பயங்கரவாத நடவடிக்கை தொடர்பில் எவ்வாறான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், பாதுகாப்புச் செயலாளரிடமும், காவல்துறைமா அதிபரிடமும், தான் விளக்கம் கோரியதாகவும், இதன்போது காவல்துறைமா அதிபர் தவறு இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டார் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த நிலையில், காவல்துறைமா அதிபர் இன்றைய தினத்திற்குள் பதவி விலகுவார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர், சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை இன்றைய தினம் நீக்க திட்டமிட்பட்டிருந்தது.

எனினும் நேற்றைய தினம்கூட சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, அந்தத் தடையை நீக்குவது தொடர்பில் ஆராயப்படுவதாகவும், அது குறித்து ஆலோசிப்பதற்காக சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள பிரதானிகளை இன்று சந்திப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், சமூக ஊடகங்களை முழமையாக தடைசெய்ய வேண்டிய நிலை தனக்கு ஏற்படும் என்றும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை