இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரிகளுள் ஒருவரான அப்துல் லத்தீப் ஜமீல் மொஹமட்,
அவுஸ்திரேலியாவில் கல்விகற்ற காலத்தில் அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தவர் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
2009 முதல் 2013 வரையான காலப்பகுதியில், மெல்போனின் ஸ்வின்பேர்ன் பல்கலைக்கழகத்தில் அவர் கல்வி கற்றுள்ளார்.
இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான அவரது தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கல்வி கற்றுள்ள அவர், தனது உயர் கற்கைகளுக்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
இந்த நிலையில், டெய்லி மெய்ல் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ள, குறித்த தற்கொலைதாரியின் சகோதரி, அவுஸ்திரேலியாவில் வைத்து அடிப்படைவாத கருத்துக்களுக்கு ஆட்பட்டிருந்த தனது சகோதரர், அங்கிருந்து திரும்பியபோது, தனது முன்னைய நிலையிலிருந்து முழுமையாக மாறியிருந்தார் என்று தெரிவித்துள்ளார்.
இதேநேரம், குறித்த தற்கொலை குண்டுதாரி, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றிருந்தார் என்பதை அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.