அமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை ஆதரித்து வாக்களிக்கவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
முதலில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தமது பதவியில் இருந்து விலகி, அவர் மீதான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சிவசக்தி ஆனந்தன் கோரினார்.
எனினும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமிடத்து, அவருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஆதரிக்க நேரும் என்றும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.
இந்தவிடயத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாகவே இயங்குவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை அமைச்சர் றிசாட் மீதான அவநம்பிக்கை பிரேரணையை ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழீழ விடுதலை இயக்கம் கடந்த தினம் தீர்மானித்திருந்தது.
அத்துடன இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் இந்த அவநம்பிக்கை பிரேரணையை ஆதரிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார்.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
இதேவேளை அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக இன்றையதினம் வவுனியாவில் பதாதைகளும் சுவரொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.