தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இந்திய தொழில் அதிபர்கள் முதலீடு செய்ய சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்தாண்டு சீனாவில் நடைபெறும் முறைசாரா சந்திப்பில் பங்கேற்க வருமாறு ஜின்பிங் விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் இடையே முறைசாரா உச்சிமாநாட்டின் இரண்டாவது நாள் பேச்சுவார்த்தை கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ரிசார்ட்டில் நடைபெற்றது. சென்னையில் இருந்து கோவளம் வந்த ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்றார்.
பின்னர் இருவரும் உரையாடியபடியே பேட்டரி காரில் பயணித்து, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கண்ணாடி அறையை சென்றடைந்தனர். மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் உடன் இருக்க, அங்கு இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு சீன அதிபருடன் வந்த மோடி, அவருக்கு கோவளம் கடற்கரையோர எழில் காட்சி குறித்து எடுத்துரைத்தார். பின்னர் இருவரும் சிறிது தூரம் உரையாடியபடியே நடந்துசென்றனர்.
இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் தமது குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், தமிழகம்-சீனா இடையே இருந்த பழமையான வர்த்தக மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் பெரும்பாலான காலக்கட்டங்களில் இந்தியாவும் சீனாவும் பொருளாதார வல்லரசாக திகழ்ந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவின் வூகான் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற முறைசாரா உச்சிமாநாடு, இரு நாடுகளின் உறவில் புதிய நம்பிக்கையையும் புதிய உத்வேகத்தையும் அளித்தது எனவும் பிரதமர் கூறினார்.
சென்னை மூலம் ஏற்பட்டுள்ள பிணைப்பு, இந்திய-சீன உறவில் புதிய சகாப்தம் படைக்கும் என்றும் மோடி தெரிவித்தார். இருதரப்பு உறவுகள் தொடர்பாக, நண்பர்களைப் போல, இதயபூர்வமான சந்திப்பை மேற்கொண்டதாக சீன அதிபர் ஜின்பிங் அப்போது குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விவேகத்துடன் கையாள்வது என்றும், அவை தகராறுகளாக மாற அனுமதிக்கப் போவதில்லை என்று இருதரப்பும் முடிவெடுத்திருப்பதாக மோடி குறிப்பிட்டார். இரு நாடுகளிடையேயான நல்லுறவு உலகின் அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் பங்களிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள் அடங்கிய கண்காட்சியை மோடியும் ஜின்பிங்கும் பார்வையிட்டனர். கலைநயமிக்க பொருட்களின் பாரம்பரிய சிறப்பு குறித்து ஜின்பிங்கிற்கு மோடி விளக்கினார்.
காஞ்சிப்பட்டு, தஞ்சை ஓவியம், நாச்சியார்கோவில் வெண்கல குத்துவிளக்கு, பட்டு நெய்யும் தறி, கைவேலைப்பாடுகளுடன் கூடிய மரச்சிற்பங்கள் என ஒவ்வொன்றாக ஜின்பிங்கிற்கு மோடி விளக்கினார்.
கோவை மாவட்டம் சிறுமுகைபுதூரில் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நெய்யப்பட்ட, ஜின்பிங் உருவம் பொறித்த பட்டாடை ஒன்றையும் பரிசாக வழங்கினார்.
பேச்சுவார்த்தை முடிந்தபின் கோவளத்தில் இருந்து சாலை வழியாக சென்னை விமான நிலையம் வந்த ஜின்பிங், தனி விமானத்தின் மூலம் நேபாளம் புறப்பட்டுச் சென்றார்.
அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். அப்போது சீன அதிபர் ஜின்பிங், ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் சிறிதுநேரம் அளவளாவினார்.
அதனைத் தொடர்ந்து, கோவளத்தில் இருந்து திருவிடந்தைக்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.
டெல்லி புறப்பட்ட பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,