ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான குழந்தை சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயும், அ.தி.மு.க. சார்பில் 10 லட்சம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் குழந்தை சுஜித்தின் பெற்றோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
சுஜித்தின் உருவப்படத்திற்கும் மலர் தூவி முதலமைச்சர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுஜித் ஆழ்துளையில் விழுந்த செய்தி கிடைத்தவுடன் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது என்றார்.
சுஜித்தை மீட்க விடா முயற்சி செய்த போதும் பலனில்லாமல் போய்விட்டது என்று கூறினார். மீட்புப் பணியில் மெத்தனம் என்ற மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க தவறானது என்று முதலமைச்சர் மறுத்தார்.
தி.மு.க. ஆட்சியில் தேனியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் இறந்த நிலையில்தான் மீட்கப்பட்டான் என்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அப்போது ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
சுஜித்தின் குடும்பத்திற்கு நிதி உதவியாக அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாயும், தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
ஆழ்துளை கிணறு தொடர்பான விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்திய முதலமைச்சர், இது போன்ற விபத்துகளை தடுக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் பாருங்க :
Child Surjith Rescue Live Updates | குழந்தை சுர்ஜித் மீட்பு பணிகள் தீவிரம்