” அவளே என்னவள்!….”
அவளின் கண்ணீரைக் கடலாக்கி
என் மனமெனும் குழியில்
ஊற்றிவிட்டேன்
பார்வையெனும் ஈட்டியினை நுனியுடைத்து
பாதாளத்தில் பதுக்கித்
திணித்துவிட்டேன்….
இதழோரத்து குமின்சிரிப்பை
இன்று சிலுவைகள்
ஏந்தச் செய்தேன்
அவளது கவிதைகளை கசக்கி
ஓட்டிற்குள் புகுந்த
ஆமைகளாக்கினேன்…..
என்னவள் குரலைக் குமுறலாக்கி
கற்பாறைகளுக்கு இடையில்
புதைத்துவிட்டேன்
கர்ப்பத்தைக் கனலாக்கி
கனிவின்றி காக்கைக்கு
இரையாய் இட்டேன்
அவளது கருப்பையைக் கழற்றி
மின்கம்பிகளில் உணர்வின்றி
காயப்போட்டேன்….
இதயத்தைக் கசக்கிப்பிழிந்து
குருதியை சுவைத்துப் பார்த்தேன்
நிழலை நிர்மூலமாக்கி
நிர்க்கதியாய் அலையவிட்டேன்
இருந்தும்கூட,
என்னுயிரை ஆள்கிறாள்
அவளே என்னவள்!…..
ஹட்டன்,
கவிஞர் பிரவீனா