வலுவான

வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், குமரிக் கடலில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று அதிகாலை மழை பெய்த நிலையில், நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது.

இரவு முழுவதும் பெய்த மழை அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது. பல மணி நேரம் பெய்த மழை காரணமாக ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டாரங்களிலும் இரவில் மழை நீடித்தது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றி உள்ள சாலவேடு, பாதிரி, தழுதாழை, வழூர், மருதாடு, மாம்பட்டு, பொன்னூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

நாகப்பட்டிணம், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, கீழ்வேளூர் , பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் இரவு வரையில் விடிய விடிய,கனமழை பெய்தது.

சேலம், விழுப்புரம், திருவாரூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை நீலகிரி மாவட்டங்களில் நேற்று பகல் நேரத்திலும், இரவிலும் மிதமானது முதல் கனமழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, குமரிக் கடலில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா, குமரி, மாலத்தீவு, லட்ச தீவு, தென் தமிழக கடற்பகுதிகளுக்கு நாளை வரை செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தூத்துக்குடியில் நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இதனால் தூத்துக்குடி, புன்னக்காயல், மணப்பாடு, காயல்பட்டிணம் ஆகிய பகுதிகளில் படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.

தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

ராமநாதபுரம், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க :

Child Surjith Rescue Live Updates | குழந்தை சுர்ஜித் மீட்பு பணிகள் தீவிரம்

சுர்ஜித் நலமுடன் வர வேண்டும் என வேண்டுகிறேன்

அம்மா இருக்கேண்டா எஞ்செல்லம்

கண்ணீர் விட்டு கதறுகிறேன்

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …