பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 ஆளுமைகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் கும்பல் தாக்குதல் உள்ளிட்ட வன்முறைச் செயல்கள் மோடி ஆட்சிக் காலத்தில் அதிகரித்துள்ளதாக மணிரத்னம், ராமச்சந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட 49 ஆளுமைகள் கடந்த சில வாரங்களுக்கு முன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்னர், 49 பேர் மீதும் பீகாரில் தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
தற்போது, இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ‘பிரதமர் அமைதியான இந்தியாவை எதிர்பார்க்கிறார். நாடாளுமன்றத்தில் அவருடைய பேச்சுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன.
அதனை, வெறும் எழுத்தில் மட்டும் மாநிலங்கள் பின்பற்றக் கூடாது? பிரதமரின் லட்சியத்துக்கு எதிராக என்னுடைய சக நபர்கள் 49 பேர் மீது தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பீகாரிலிருந்து 49 பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கை, நீதியை நிலைநாட்டும் வகையில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.