இந்தோனேசியாவின் சில பகுதிகளில் இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்தனர். 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சமீபத்திய நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியா நாட்டின் வடமேற்கில் உள்ள பென்டோலோ நகரில் இன்று காலை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
3 மணி நேரத்துக்கு பின்னர் சுலவேசி தீவில் உள்ள பிட்டுங் நகரில் அடுத்ததாக 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்த நிலையில் நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு மலுக்கு பகுதியில் இன்று பிற்பகல் 6.3 ரிக்டர் அளவில் மூன்றாவதாக மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கங்களால் அப்பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. சில வீடுகள் சேதமடைந்தன.
வீடுகளில் இருந்து ஓட்டம்பிடித்த மக்கள் சாலைகள் மற்றும் திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இன்றைய நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #quakestrikes #Indonesiaquake