சுர்ஜித் நலமுடன் வர வேண்டும் என வேண்டுகிறேன்; பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த்
பூமிக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் சுர்ஜித் நலமுடன் வரவேண்டும் என ஆண்டவனை வேண்டி கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி என்ற இடத்தில் நேற்று முன் தினம் மாலை 5.40 மணிக்கு மூடப்படாத ஆழ்துளை கிணறு ஒன்றில், 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் தவறி விழுந்து விட்டான். 29 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்த நிலையில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது.
மாநில மீட்பு படையினர் மற்றும் தனியார் மீட்பு குழுவினர் முயன்று சிறுவனை மீட்க முடியாததால், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் நேற்று வரவழைக்கப்பட்டனர். அவர்களும் பல்வேறு வழிகளில் முயன்று பார்த்தனர். ஆனால், சிறுவனை மீட்பதில் பின்னடைவே ஏற்பட்டது.
சிறுவன் தற்போது 100 அடிக்கும் கீழே இருக்கிறான். மேலும், கீழே சென்று விடாமல் தடுக்க அவன் கையில் கயிறு கட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆழ்துளை கிணறு அருகே புதிதாக குழி தோண்டும் பணி நடக்கிறது. தீயணைப்பு வீரர்களை உள்ளே இறக்கி குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 3 பேர் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.
புதிதாக துளையிடும் இடத்தில் அதிக பாறைகள் இருப்பதால், தாமதம் ஏற்படுகிறது. பாறை உடைப்பு கருவிகளை பயன்படுத்தி துளையிடப்பட்டு வருகிறது.
சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட தமிழகத்தின் பல இடங்களிலும் கோவில்கள், தர்காக்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. சமூக வலைதளங்களிலும் பலரும் சுர்ஜித் மீட்கப்பட்டால்தான் உண்மையான தீபாவளி என்று கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி பண்டிகையை ஒட்டி தனது ரசிகர்களை வீட்டுக்கு வெளியே சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எல்லாரின் இதயங்களிலும் வாழ்க்கையிலும் இந்த தீபாவளி வெளிச்சத்தைத் தர வேண்டும் என சொல்லி ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
இந்த நன்னாளில் பூமிக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் சுர்ஜித் நலமுடன் வரவேண்டும் என ஆண்டவனை வேண்டி கொள்கிறேன். பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை தேவை. அரசும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறது,
அவர்களும் தொடர்ந்து விடா முயற்சியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை தப்பு சொல்ல முடியாது. லதா ரஜினிகாந்த் குழந்தைகள் பாதுகாப்பிற்காக கமிட்டி அமைக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சித்து வருகிறார். நிச்சயமாக விரைவில் அதற்கான வாய்ப்பு அமையும்” என தெரிவித்தார்.
இதையும் பாருங்க :
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன் தெரியுமா…?
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தீபாவளி வாழ்த்து
நவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் – துணை முதலமைச்சர்




