அம்பாறை
அம்பாறை

அம்பாறையில் மீண்டும் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அம்பாறை – சாய்ந்தமருது, நிந்தவூர் பகுதிகளில் நேற்றையதினம் இராணுவமும் காவற்துறையினரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தாக்குதல்களை அடுத்து, தற்போது அந்த பகுதியில் மீண்டும் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இராணுவ ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

புலனாய்வுத் தகவல் அடிப்படையில் இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்களால் 3 வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதுடன், பாதுகாப்பு தரப்பினரை நோக்கி துப்பாக்கி தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

இதனை அடுத்து இராணுவம் அவர்களுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலின்போது குறுக்கிட்ட பொதுபிரஜை ஒருவர் கொல்லப்பட்டதுடன், 3 அல்லது நான்கு பேர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களில் இருண்டு பேர் கொல்லப்பட்டனர்.

அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதேநேரம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள வீட்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் பதுங்கியோ அல்லது சடலமாகவோ இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்தநிலையில் அதனை சோதனை செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

இதேவேளை, நிந்தவூரில் பாதுகாப்பு படையினரால் பதிவு செய்யப்படாத புதிய சிற்றூர்ந்து ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சிற்றூர்ந்து, தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரான சஹ்ரானின் மைத்துனரான நியாஸ் என்பவருக்கு சொந்தமானது என்று படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அங்கு மீட்கப்பட்ட 2 அடையாள அட்டைகளை அடிப்படையாக கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இந்த சிற்றூர்ந்து கடந்த 19ம் திகதி அக்கரைப்பற்றில் இருந்து பணத்துக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தற்போது அந்த பகுதியில் விசேட அதிரடிப்படை மற்றும் காவற்துறையினரின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம் புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைய அம்பாறை -சம்மாந்துறையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பாரிய அளவான வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அங்கிருந்து இரும்பு உருண்டைகள் 100000, ஜெலட்நைட் குச்சிகள் 150 என்பவற்றுடன், மேலும் சில வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டன.

அத்துடன், தற்கொலை குண்டுதாரிகள் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட போது அணிந்திருந்த ஆடை மற்றும் திரைசீலை என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் ட்ரோன் கருவி ஒன்றும், மடிக்கணினி ஒன்றும் அங்கு மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பிரதேசங்களில் மீளறிவித்தல் வரையில் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பிரதேசங்களைத் தவிர்ந்த நாட்டின் ஏனையப் பகுதிகளில் நேற்று இரவு அமுலாக்கப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம், இன்று அதிகாலை 4 மணியுடன் விலக்கிக்கொள்ளப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட எட்டு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெள்ளவத்தை தொடருந்து நிலையத்துக்கு அருகில், கடற்படையினர் மேற்கொண்ட சோதனையில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஒருகிலோ கிராம் சீ.4 வெடிமருந்து மீட்கப்பட்டது.

கைதான சந்தேகநபர்களும், வெடிமருந்தும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …