காதல் மனைவியை பெங்களூருவில் தவிக்கவிட்டுவிட்டு தப்பிச் சென்ற கணவரை தேடி மனைவி ஊர் ஊராக அலைந்து வருகிறார்.
சென்னை அடையாரில் தனியார் மருந்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தவர் திருவண்ணமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த செலின். அதே அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியைச் சேர்ந்த அருண் பணியாற்றி வந்தார். இருவரும் நட்பாக பழகி வந்தனர்.
இந்நிலையில், செலின் சென்னையில் இருந்து பெங்களூருவில் உள்ள கிளைக்கு மாற்றப்பட்டார். பின்னர் செல்போன் மூலமாக இருவரும் பேசி பழகி வந்தனர்.
இது கடந்த ஜனவரி மாதம் காதலாக மாறியது. இதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். மார்ச் 31ம் தேதி பெங்களூருக்கு சென்ற அருண், செலினை ஓட்டல் அறையில் வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் செலினை சமாதானப்படுத்திய அருண், உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறிவிட்டு, ஏற்பாடுகளை செய்வதாக சென்னை வந்துள்ளார். நாட்கள் சென்றதே தவிர திருமணத்திற்காகன ஏற்பாடுகள் நடக்கவில்லை. செலினுடன் பேசுவதையும் அருண் நிறுத்தி உள்ளார்.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து, செலின் பெங்களூரு போலீசாரிடம் அருண் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் அருண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மணியை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்ய முடிவெடுத்தனர்.
சிறைக்கு செல்வதை தவிர்க்க காதலி செலினை திருமணம் செய்து கொள்வதாக அருண் ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர் பெண் வீட்டார் முன்னிலையில் செலினை திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
ஆகஸ்ட் 6ம் தேதி அவர்கள் தங்கள் திருமணத்தை திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டனர்.சென்னையில் பணியாற்றி வந்த வேலையை விட்டுவிட்டு மனைவி உடனே பெங்களூருவில் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில் செலின் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் அருண் இல்லை. போனில் தொடர்புகொண்டபோது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் வந்து தேடிப்பார்த்துள்ளார். அங்கு இல்லாத நிலையில், புதுக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருப்பதாக கிடைத்த தகவலின் அடைப்படையில் அருணை தேடி மாமியார் வீட்டிற்கு சென்றார் செலின்.மாமியார் வீட்டில் விசாரித்தபோது அவரை அருண் குடும்பத்தினர் மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கணவரை சேர்த்து வைக்கக்கோரி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செலின் புகார் அளித்துவிட்டு அங்கேயே தங்கியுள்ளார்.